பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி நிலைகள்




பியாஜே அறிதிறன் வளர்ச்சி

பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி நிலைகள்

       மனிதன் வெளி உலகம் பற்றி அறிந்து கொள்ள அவனுக்கு புலன் உணர்வு புலக்காட்சி கவனம் சிந்தனை ஆராய்ந்தறிதல் போன்ற உளச்செயல்கள் பெரிதும் உதவுகின்றன. இவற்றின் துணையுடன் மொழியையும் பயன்படுத்தி தன் அனுபவங்களை வலுப்படுத்திக் கொள்கிறான். இவ்வாறு அனுபவங்களைப் பெறுவதற்கு
 உளச்செயல்களைப் பயன்படுத்தும் ஆற்றலை அறிதிறன் என்று அழைக்கிறோம்.

·         அறிதிறன் வளர்ச்சி

அறிதிறன் கட்டமைப்பு

    மூளையின் உயிரியல் முதிர்ச்சி மற்றும் தனிப்பட்ட அனுபவங்களுக்கிடையே ஏற்படும் இடைவினையின் காரணமாக அறிதிறன் வளர்ச்சி ஏற்படுவதாக சுவிட்சர்லாந்து உளவியல் அறிஞர் ஃபியாஜே கருதுகிறார். இயற்கையிலேயே குழந்தைகள் அறிஞர்களாகப் பிறந்தவர்கள். இவர்கள் உலகைப்புரிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். இதற்கென மூளை அறிதிறன் கட்டமைப்பை ஏற்படுத்திக் கொள்கிறது. 

ஒழுங்குபடுத்தப்பட்ட சிந்தனையின் மாதிரிகள் அடங்கிய உள்கட்டமைப்பினைத் தான் அறிதிறன் கட்டமைப்பு என்று அழைக்கிறோம்.
உலகச் சூழலுடன் இடைவினை ஏற்படுத்திக் கொள்ள இவ்வறிதிறன் கட்டமைப்பு நமக்கு உதவிபுரிகின்றது.

இவ்வறிதிறன் கட்டமைப்பில் உட்கிரகித்து தன்வயபடுத்தலும் இடம் கொடுத்தலும் அடங்குகின்றன.

A ) உட்கிரகித்துத் தன்வயபடுத்தல்
       ஏற்கனவே உள்ள அறிதிறன் கட்டமைப்பில் புதிய அனுபவங்களை இணைத்துக் கொள்ளுதலை உட்கிரகித்துத் தன்வயபடுத்தல் என  அழைக்கிறோம்.
       உதாரணமாக, தொலைக்காட்சி பெட்டி பூனைக்குட்டி பற்றிய அறிதிறன் கட்டமைப்பினை குழந்தை ஏற்கனவே பெற்றிருப்பதாக வைத்துக்கொள்வோம். ஒரு குழந்தை முதன் முதலாக கணிப்பொறியைப் பார்க்கும்போது உருவம், அளவு, உயரம் இவற்றைப் பார்த்து அதனை தொலைக்காட்சி பெட்டி என்று ஆச்சரியத்துடன் அழைக்கிறது. பின்னர் வேறுபாடுகளை உணர்ந்து இது வேறொரு பொருளாகும் என்று அறிகிறது. இவ்வாறு புதிய அனுபவத்திற்குப் பொருள் தந்து ஏற்கனவே உள்ள அறிதிறன்  கட்டமைப்பில் இணைத்துக் கொள்கிறது.

 B)  இடம் கொடுத்தல்
       ஏற்கனவே உள்ள அறிதிறன் கட்டமைப்பு புதிய அனுபவங்கள் வாயிலாக மாற்றம் பெறுதலை இடம் கொடுத்தல் என்று  அழைக்கிறோம். வளர்ந்த நிலையில் உள்ள அணிலை பூனைக்குட்டி என்று அழைக்கும் குழந்தை இவற்றிற்கிடையே காணப்படும் வேறுபாடுகளான உருவம்,நகருதல்,மரத்தில் ஏறுதல்,பஞ்சு போன்ற அடர்ந்த முடியுள்ள வால் ஆகியவற்றைக் கவனத்தில் கொள்கிறது. இதன் பயனாக பூனைக்குட்டி என்ற அறிதிறன் கட்டமைப்பு மாற்றம் பெறுவதுடன் ஒரு புதிய அறிதிறன் கட்டமைப்பும் ஏற்படுகிறது. பூனைக்குட்டி என்ற அறிதிறன் கட்டமைப்பு மாற்றம் பெற்று அணில் என்ற புதிய அறிதிறன் கட்டமைப்பு ஏற்படுகிறது. 
இவ்வாறு நாம் ஏற்கனவே அறிந்திருப்பதன் அடிப்படையில் புதிய அனுபவங்களைப் புரிந்து கொள்ள முயற்சிப்பதன் வாயிலாகவும் புதிய அனுபவங்கள் ஏற்கனவே உள்ள அறிதிறன் கட்டமைப்புக்கு பொருந்தாதபோது நம்முடைய சிந்தனையை மாற்றியமைத்துக் கொள்வதன் வாயிலாகவும் அறிதிறன் வளர்ச்சி ஏற்படுகிறது என்பது ஃபியாஜேயின் கருத்தாகும்.

·         அறிதிறன் வளர்ச்சி நிலைகள்
குழந்தையின் அறிதிறன் வளர்ச்சியில் ஃபியாஜே சில குறிப்பிடதக்க நிலைகளைக் குறிப்பிடுகிறார்.

v  புலன் இயக்க நிலை -  0 - 2 வயது:-

                0-2 வயது வரை குழந்தையின் உளவளர்ச்சியிள் முக்கிய பங்கு வகிப்பது புலக்காட்சிகளும், உடல் இயக்கச் செயல்பாடுகளுமே ஆகும். பிறந்த குழந்தை 4 மாதம் வரை பார்த்தல், சூப்புதல், பெறுதல் போன்ற செயல்களில் ஈடுபடுகிறது. பொருட்கள் அல்லது நிகழ்வுகளுக்கான குறியீடுகளையோ அல்லது சாயல்களையோ குழந்தை கற்றிருக்காது. குழந்தையின் கண்ணுக்குப் புலப்படாத பொருட்களை இல்லை என்றே நினைக்கும். எட்டு அல்லது ஒன்பது மாதங்களில் பொருட்கள் நிலைத்தன்மை கொண்டவை என்றும் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டாலும் அவை உண்மையிலேயே இருக்கின்றன என்பதையும் குழந்தை அறிகிறது. அதன் அடிப்படையில்தான் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டாலும் குழந்தை அவற்றை தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறது.

v  செயலுக்கு முற்பட்ட நிலை  - 2-7 வயது:-
                இவ்வயது நிலையில் குழந்தை தன் மனதில் பொருட்களின் சாயல்களைப் பதிய வைக்கிறது. மொழியையும் ஓரளவு பயன்பாடுத்தத் துவங்குகிறது. உயிரற்ற பொருட்களை உயிருள்ள பொருட்களாகப் பாவித்து அவற்றுடன் பேசுவது, விளையாடுவது போன்ற செயல்களும் நிகழுகின்றன. சிந்தனை குழந்தையிடம் வளர்ந்திருந்தாலும் அதிலே நெகிழ்வுத் தன்மை இருக்காது. குழந்தை இலகுவான, நீண்ட, மிருதுவான போன்ற கருத்துமைகளை புரிந்து கொள்ள முடிவதில்லை. ஒரு பொருளின் தோற்றம் மாறுபட்டுக் காணப்பட்டாலும் அதன் அடிப்படைப் பண்புகளில் மாற்றம் இருக்காது என்பதை புரிந்து கொள்வதில்லை.
                A,B என்ற இரண்டு கண்ணாடிப் பாத்திரங்களில் 250 மில்லி கிராம் எண்ணெய் நிரப்பப்பட்டு உள்ளது.
                A என்ற பாத்திரத்திலிருந்து எண்ணெயை சிந்தாமல் C பாத்திரத்திற்கு மாற்றியவுடன் குழந்தையிடம் A மற்றும் C என்ற பாத்திரங்களில் எதில் எண்ணையின் அளவு அதிகமாயிருக்கிறது என்று கேட்டால் C என்று சொல்லும். ஏனெனில் குழந்தையின் சிந்தனையில் நெகிழ்ச்சித் தன்மை இல்லை. 

v  பருப்பொருள்நிலை  - 7- முதல் 11 வயது:-
              இவ்வயது நிலையில் சிறு பிரச்சினைகளுக்கு குழந்தை தீர்வு காண்கிறது. தான் பார்க்கும் பொருட்களை வகைப்படுத்தவும் அவற்றிற்கிடையே உள்ள தொடர்பை அறிந்துகொள்ளவும் குழந்தையால் முடிகிறது. பொருட்களின் பண்புகள் குறித்து ஒரே நேரத்தில் சிந்திக்க முடிகிறது. பாத்திரங்களின் அளவு வேறுபட்டாலும் அதில் நிரப்பப்பட்டு இருக்கும் பொருட்களின் அளவு மாறுவதில்லை என்பதை குழந்தையால் கூற முடியும். புதிய நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ள ஒரு சில பொருட்களை அதன் முந்தைய நிலைக்கு கொண்டு வர முடியும் என்பதையும் குழந்தை உணர்ந்து கொள்கிறது. நீயும் உன் அக்காவும் மருத்துவமனைக்கு எதற்கு போனீர்கள்? என்ற கேள்விக்கு மருத்துவரைப் பார்க்க என்பதற்கு பதிலாக என் அக்காவிற்கு உடல்நிலை சரியில்லை என்பதால் மருத்துவமனைக்குச் சென்றோம் என்ற பதிலை எதிர்பார்க்கலாம்.

v  கருத்தியல் நிலை -  11-16 வயது:-
              குழந்தை இவ்வயது நிலையில் குமரப்பருவத்தில் அடியெடுத்து வைக்கிறது. கருத்தியல் சிந்தனை இந்நிலையில் குழந்தையிடம் காணப்படுகின்றது. கொடுக்கப்பட்டுள்ள சூழ்நிலையின் அடிப்படையில் எதிர்காலத்தில் என்ன நிகழ வாய்ப்புள்ளது என்பது பற்றியும் சிந்திக்க முடியும். பிறர் நோக்கிலிருந்து கருத்துக்களையும், பிரச்சினைகளையும் இவ்வயதினர் பார்க்க முடியும். ஒரு
 பிரச்சினைக்கான தீர்வுகளை கருதுகோள்களாக இவர்கள் சிந்தித்து பார்க்கும் இயல்பினை பெற்றிருப்பர். அனுமானங்களை ஒவ்வொன்றாகச் சோதிக்கும் பார்க்கவும் இவர்களால் முடியும்.
ஆய்வுச்சிந்தனையைப் பயன்படுத்தி மனித உறவுகள், நெறிமுறைகள், அரசியல் போன்றவற்றின்மீது தங்களது கருத்துக்களை முறைப்படுத்தி வெளிப்படுத்த இவர்களால் முடியும். பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் அறிவியல் சிந்தனையும் இவ்வயது நிலையினரிடம் காணப்படுகின்றது.

·         பியாஜே  கருத்தின் கல்வி தாக்கங்கள்

1) குழந்தையின் அறிவு வளர்ச்சி நிலையை நாம் மாற்றி அமைக்க இயலாது. ஒவ்வொரு நிலையிலும் குழந்தை குழந்தையின் பண்புகளை கவனமாக ஆராய்ந்து அதற்கேற்ற வகையில் ஆசிரியர் செயல்பட வேண்டும்.

2) குழந்தையின் மன வளர்ச்சிக்கு ஏற்ப பள்ளி பாடத்திட்டங்கள் அமைக்கப்பட வேண்டும். குழந்தையின் வயது நிலைக்கு ஏற்ப கற்றல் அனுபவங்கள் அமைத்து தரப்பட வேண்டும்.

3) குழந்தையின் வளர்ச்சி நிலையில் படிப்படியாக ஏற்படும் மாற்றங்களை ஆசிரியர்களும் பெற்றோர்களும் அறிந்து கொண்டு அவர்களை வழி நடத்திட முடியும்.

4) குழந்தையின் கற்றல், அறிதிறன்,வளர்ச்சி மற்றும் சூழல் அனுபவங்களால் தீர்மானிக்கப்படுகிறது. சிறப்பான கற்றல் நடைபெற ஆசிரியர் அளிக்கும் அனுபவங்கள் குழந்தையால் உட்கிரகித்துக் கொள்ளும்படி அமைய வேண்டும்.

5) உண்மையான கற்றல் குழந்தையிடம் நடைபெற வேண்டும் எனில் பள்ளியிலும் மற்றும் வீட்டிலும் விரும்பத்தக்க சூழல்கள் அமைத்துத் தரப்படுதல் வேண்டும்.

6) 4 வயது வரை குழந்தைகளுக்கு அனுபவங்கள் பருப்பொருட்களால் அமைத்துத் தரப்படுதல் வேண்டும்.

7) உயர் நிலையில் கற்பித்தலுக்கு மொழியுடன் குறியீடுகளையும் பயன்படுத்த வேண்டும்.

8) சில பாடக்கருத்துக்கள் குழந்தை தானே கண்டறியும் முறையில் கற்பிக்கப்படலாம்.

9) குழந்தையின் அறிதிறன் வளர்ச்சியில் பாடச்செயல்திட்டத்துடன் கல்வி இணைமுறைச் செயல்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

10)  குமரப்பருவ வயதினரிடத்தில் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் திறமைகளை வளர்க்க வேண்டும். ஒரு கருத்தை அல்லது பிரச்சினையை வேறொருவரின் நிலையிலிருந்து ஆய்வு செய்திட அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

புரூனரின் அறிவுப் புல வளர்ச்சி

       ஜெரோம் புரூனர் என்பவர் அமெரிக்க நாட்டின் உளவியல் அறிஞர்களுள் ஒருவர் ஆவார். இவர் குழந்தையின் அறிதிறன் வளர்ச்சியில் மூன்று நிலைகளைக் குறிப்பிடுகிறார்.

1) செய்தறிதல் நிலை - 0-3 வயது வரை:-
       
       இவ்வயது நிலையில் குழந்தை தன் சிந்தனைக்கு மொழிச்சாயல்களையோ பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. குழந்தை பருப்பொருட்களைத் தொடுதல், நகர்த்துதல், எறிதல் அவற்றை விளையாட்டிற்குப் பயன்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுகிறது. இவ்வாறு செயல்களில் ஈடுபடுவதால் உலக அனுபவம் குழந்தைக்கு ஏற்படுகிறது.

2) உருவக நிலை  - 3-7 வயது வரை:-
       
       இந்நிலையில் குழந்தை தன் அனுபவங்களை விரிவாக்கிக் கொள்ள பருப்பொருட்களை மட்டும் சார்ந்திருப்பதில்லை. பருப் பொருட்கள் கண்முன் இல்லாத நிலையிலும் அவற்றை மனதில் உருவகப்படுத்தி சிந்தனையை வெளிப்படுத்த முடிகிறது.
        உதாரணமாக:-  தாஜ்மஹால் என்ற உருவகம் மனதில் பதிந்திருக்கும் நிலையில் அது தொடர்பான தன் கருத்துகளை குழந்தையால் வெளிப்படுத்த இயலுகிறது.

3) குறியீட்டு நிலை  - 8-14 வயது வரை:-

       மூன்றாம் நிலையில் குழந்தையிடம் போதுமான வளர்ச்சி ஏற்பட்டிருப்பதால், தன் சிந்தனைக்கு மொழியையும் இதர குறியீடுகளையும் பயன்படுத்துகிறது, மொழி மற்றும்
குறியீடுகளைப் பயன்படுத்தி தன் எண்ணங்களை வெளியிடவும் குழந்தையால் முடிகிறது. சதுரத்தின் பரப்பளவு என்ன என்ற வினாவுக்குப் பதில் அளிக்க ஒரு மாணவன் சதுரத்தைப் பார்ப்பதில்லை. சதுரத்தை மனதில் உருவகப் படுத்துவதில்லை. மாறாக, a x a= a2 என்ற குறியீடு மூலம் விடையளிக்க முடிகிறது.

புரூனர் கருத்தின் கல்வி முக்கியத்துவம்

                1 ஆரம்ப நிலையில் குழந்தைகளுக்கு செயல் முறைகள் மூலம் கற்றல் அனுபவங்களை அமைத்துத் தரவேண்டும். இவ்வகைக் கற்றல் அனுபவங்கள் குழந்தையின் அறிதிறனை துரிதப்படுத்தும்.

                2 குழந்தைகள் பார்த்ததை நினைவில் நிலைநிறுத்துவதற்கு ஏற்ப கற்பித்தல் துணைக் கருவிகள் பயன்படுத்தப்பட வேண்டும்.

                3 கற்றல் அனுபவங்களை குறியீடுகளாகச் சுருக்கியளித்தல் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்குச் சிறந்த பயனை அளிக்கும்.




Comments

  1. the best new slots in casino online - Kookoo.KR
    Play slots in casino online! Play the most exciting online casino games such as Cleopatra, Wheel 퍼스트 카지노 of ボンズ カジノ Fortune, Mega Joker and many 더킹카지노 more!

    ReplyDelete

Post a Comment